சுங்கச்சாவடிகளுக்கு எதிர்ப்பு: வன்முறையில் முடிந்த மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்

சுங்கச்சாவடிகளுக்கு எதிர்ப்பு: வன்முறையில் முடிந்த மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்

2 mins read
fb59d460-8367-4f09-af70-f581620727e8
திருச்சி, தஞ்சாவூர் இடையே துவாக்குடியில் உள்ள சுங்கச்சாவடி முற்றுகையிடப்பட்டது. - படம்: ஊடகம்

திருச்சி: தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.

திருச்சி, தஞ்சாவூர் இடையே துவாக்குடியில் உள்ள சுங்கச் சாவடியை திங்கட்கிழமையன்று முற்றுகையிட்டு அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதற்குத் தலைமை வகித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான அப்துல் சமது, தமிழகத்தில் மட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 70 சுங்கச்சாவடிகள் உள்ளதாகவும் அவற்றின் மூலம் பொதுமக்கள் நாள்தோறும் ரூ.50 கோடியை சுங்கக்கட்டணமாகச் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

“ஆண்டுதோறும் ரூ.18 ஆயிரம் கோடி செலுத்துகிறோம். கேரள மாநிலத்தில் ஐந்து சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளதாகவும் நெடுஞ்சாலை வசதிகளைக் கொண்டு கணக்குப் பார்த்தால் தமிழகத்தில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.

“தமிழகத்தில் காலாவதியான 30 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், சுங்கக்கட்டணங்களை மேலும் உயர்த்தக் கூடாது,” என்றார் அப்துல் சமது.

இதற்கிடையே முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க தஞ்சாவூரில் இருந்து வந்த வாகனங்களுக்கு துவாக்குடி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மனித நேய மக்கள் கட்சியினர் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது.

சுங்கச்சாவடி கண்ணாடி, கண்காணிப்புக் கருவிகள், வாகனத் தடுப்புக் கட்டைகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிலைகுத்தியது. சுங்கச்சாவடி வழியாகச் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினர் விரைந்து வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். அப்போது மனித நேய மக்கள் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இறுதியில் காவல்துறையினர் சிலரைக் கைது செய்த பிறகே பதற்றம் குறையத் தொடங்கியதாகவும் போராட்டம் காரணமாக சுங்கச்சாவடியின் இருபக்கங்களிலும் ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நிலைகுத்தி நின்றதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்