சென்னை: தமிழகத்தில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் எட்டு சிறப்பு நீதிமன்றங்கள், மூத்த நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்து மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்த நீதிமன்றங்களுக்குப் புதிய மாவட்ட நீதிபதிகளை நியமித்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த டாக்டர் எல்.எஸ்.சத்தியமூர்த்தி, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கோவை சிறப்பு நீதிபதியாக ஆர்.விவேகானந்தன், திருச்சி சிறப்பு நீதிபதியாக பி.சாந்தி, மதுரை சிறப்பு நீதிபதியாக ஆர்.ஜோசப் ஜாய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதியாக என்.ஸ்ரீராம், சேலத்திற்கு ஆர்.தோத்திரமேரி, சிவகங்கைக்கு வி.ராமலிங்கம் மற்றும் திருநெல்வேலி சிறப்பு நீதிபதியாக எஸ்.ஹேமா ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இத்துடன் தென்காசியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு எஸ்.மனோஜ்குமாரும், பிற்படுத்தப்பட்டோர் சிறப்பு நீதிமன்றத்திற்கு பி.வி.வஷீத்குமாரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காகவும் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கிலும் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
