சென்னை: தமிழக அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்கான உத்தரவு புதன்கிழமை (பிப்ரவரி 4) பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதையடுத்து, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரங்களை மாநில அரசுக்கு மட்டுமே வழங்கும், சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது.
எனினும், இந்த சட்ட மசோதாவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அம்மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு புதன்கிழமை விசாரித்தது.
அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மாநில அரசு தனது தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உரிய கால அவசாகம் வழங்கப்படவில்லை என்றும் இந்த ஒரு காரணத்துக்காகவே மேல்முறையீட்டு மனு அனுமதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
எனினும், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அந்த விசாரணை முடியும் வரை புதிதாக துணை வேந்தர்களை நியமிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

