சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. இக்குற்றச்சாட்டு காரணமாக தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செல்வப்பெருந்தகை மீது பகுஜன் சமாஜ் கட்சி குற்றஞ்சாட்டி இருப்பது அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவராக இருப்பதால் அவரை விசாரிக்க காவல்துறை தயங்குகிறது என்றும் அவரை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்.
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட், பி.பி.ஜி ஆகியோரது கொலை வழக்குகளிலும் செல்வப்பெருந்தகை மீது கொலைக் குற்றச்சாட்டுகள் எழுந்ததாக பகுஜன் சமாஜ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நீக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து செல்வப்பெருந்தகை தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே பத்து பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் மேலும் 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.