திருவெண்ணைநல்லூர்: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாகக் கூறப்படும் பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை மலட்டாறு வெள்ளப்பெருக்கு காரணமாக மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணைநல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பாதிக்கப்பட்ட மக்களை வனத்துறை அமைச்சர் பொன்முடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் நிவாரண உதவிகளை வழங்க விழுப்புரம் மாவட்ட அப்போதைய ஆட்சியர் பழனி, முன்னாள் எம்.பி. பொன். கவுதம சிகாமணி, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர்.
அப்போது பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசூர் கூட்ரோடு பகுதியில் சாலை மறியல் செய்தனர்.
அமைச்சர் தான் செல்லும் வழியில் இருவேல்பட்டு கிராமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க முயற்சி செய்தபோது அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சிலர் ஆபாசமாக திட்டி சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்ததாகவும் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமர் என்கிற ராமகிருஷ்ணன், பா.ஜ.க. நிர்வாகி விஜயராணி, 37, ஆகிய இருவர் மீதும் காவல்துறை ஆய்வாளர் பாலசிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதையடுத்து மாவட்டக் காவல்துறை சூப்பிரின்டென்டண்ட் உத்தரவின் பேரில் சிறப்புப் படை அமைக்கப்பட்டு இருவரும் தேடப்பட்டு வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த நான்கு மாதமாக தேடப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி விஜயராணியை தனிப்படை அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். அதன்பின் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தின் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.