விழுப்புரம்: சிறிய ரக லாரியில், ரகசிய அறை அமைத்து, மதுப்புட்டிகளைக் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மதுப்புட்டிகளும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் விழுப்புரம் மாவட்ட நுண்ணறிவுப் பிரிவு போலிசார் தெரிவித்தனர்.
புதுவையில் இருந்து தமிழகத்தின் கோயம்புத்தூருக்கு மதுபானங்கள் கடத்தப்படுவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
புதுவையில் மதுபானங்களின் விலை குறைவு என்பதால் அங்கிருந்து உயர் ரக மதுபானங்களை அண்டை மாநிலங்களுக்கு கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இதைத் தடுக்க காவல்துறை பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மாலையில் உளுந்தூர் பேட்டை அருகே காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த சிறிய ரக லாரியைச் சோதனையிட்டனர். அதில் சரக்குகள் ஏதும் காணப்படவில்லை.
எனினும், லாரியைத் தீவிரமாகச் சோதனையிட்டபோது, அதில் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புறம் ரகசிய அறை இருப்பதும், அதில் 50 அட்டைப்பெட்டிகளில் 2,400 மதுப்புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.