கூகலுடன் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள்

2 mins read
f0f14471-8f89-4c07-bf1e-7f7e5fe0196b
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைக்க தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. - படம்: ஊடகம்

சென்னை: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆப்பிள், கூகல் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது கூகல் நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை அமைப்பது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கூகல் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, இணைய விளம்பரம், தேடுபொறி தொழில்நுட்பம் (Search Engine Technology), கிளவுட் கம்ப்யூட்டிங், கணினி மென்பொருள், குவான்ட்டம் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனமாகும். கூகலின் தாய் நிறுவனமான அல்பாபெட் (Alphabet) அமெரிக்க பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கூகல் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் அமைந்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கூகல் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் சந்தித்தபோது, தமிழகத்தில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 திறன்பேசிகள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகல் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழகத்தில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், ஸ்டார்ட்-அப் தொழில்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான திறன் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுக் கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை மேலும் அதிகரிப்பது குறித்தும் பேசினார்.

செயற்கை நுண்ணறிவுத் திறன், தரவு நிலைய விரிவாக்கம் ஆகிய முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடு செய்வது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லிங்டின் நிறுவனத்தின் முதன்மைச் செயலர் அலுவலர் யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கூகளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வளைத்தளப் பக்கத்தில், “ஆப்பிள், கூகல் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் அலுவலகங்களுக்குச் சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது என்றார்.

பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி கலந்துரையாடினோம். இந்தக் கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் தமிழகத்தை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம்,” என்று பதிவிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்