அறுவருக்குக் கலைஞர் பொற்கிழி விருது; டிசம்பர் 27ல் சென்னைப் புத்தகக் கண்காட்சி

1 mins read
f00d945c-df27-47fe-9394-7f22d7d650e9
கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் படைப்பாளர்கள். - படம்: இணையம்

ஆண்டுதோறும் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, உரைநடை ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பேராசிரியர் அருணன் - உரைநடை, நெல்லை ஜெயந்தா – கவிதை, சுரேஷ் குமார் இந்திரஜித் – நாவல், என். ஸ்ரீராம் – சிறுகதைகள், கலைராணி – நாடகம், நிர்மால்யா – மொழிபெயர்ப்பு ஆகியோருக்கு கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது.

விருது பெறுவோருக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் அளிக்கப்படும். விருதுகள் டிசம்பா் 27ஆம் தேதி தொடங்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும்.

சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 12ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு நடைபெறவுள்ள 48வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் இடம்பெற உள்ளன.

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியுடன் வழங்கப்படும். நுழைவுக் கட்டணம் ரூ.10. மாணவா்களுக்கு அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி கடைகளில் தங்கள் பதிப்பக புத்தகங்களைக் காட்சிப்படுத்துவர். கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்