சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்குவதற்கு முன்னதாகவே, சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித்குமார் வருகை தந்தார்.
காலை 7 மணி அளவில் அவர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதன்மூலம் தமிழ்நாட்டில் முதல் நபராக நடிகர் அஜித்குமார் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்.
அஜித்குமாரின் வருகையை ஒட்டி, பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்னதாகவே வாக்களிக்க அதிகாரிகள் அவரை அனுமதித்தனர்.
வெள்ளை நிற கோட் சூட் அணிந்து வந்திருந்த அவர், வாக்களித்த பிறகு தனது கை விரலில் வைக்கப்பட்ட மையைக் காண்பித்தார்.
அவரைப் பார்ப்பதற்காக அந்தப் பகுதியில் ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டிக் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

