திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்று கொள்ளையடித்த வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளியைத் தனிப்படைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 47 வயதுடைய மிஜானூர் ரஹ்மான் முல்லா என்ற ராஜு என்பவர் இவ்வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
பூந்தமல்லியை அடுத்த கூடப்பாக்கம் மேட்டுக்கண்டிகை பகுதியில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்த ‘ஏடிஎம்’ இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது.
மர்ம நபர்கள் இயந்திரத்தை அப்படியே பெயர்த்தெடுத்துத் தூக்கிச் சென்ற நிலையில், அதில் மொத்தம் ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 700 இருந்தது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து வெள்ளவேடு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
இதில் தொடர்புடைய மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சமீர், 36, மாசூம் என்ற சர்பார் கான், 49, ரசூல், 34, ஆகியோர் ஏற்கெனவே கைதாகினர்.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட மூவரிடமிருந்தும் ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், சமீர், மாசூம் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளி மிஜானூர் ரஹ்மான் முல்லாவை வெள்ளவேடு தனிப்படைக் காவல்துறையினர் இப்போது அதிரடியாகக் கைதுசெய்துள்ளனர்.
மேலும், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ‘ஏடிஎம்’ இயந்திரத்தின் உதிரிப் பாகங்கள், ரூ.29 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட மிஜானூர் ரஹ்மான் முல்லாவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வெள்ளவேடு காவல்துறையினர், பின்னர் அவரைப் புழல் சிறையில் அடைத்தனர்.
