சென்னை: மருத்துவ அவசர உதவி வாகன ஊழியர், வாகனம் ஆகியவற்றைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அவருடைய பயணம் நேற்று துறையூர் பேருந்து நிலையம் அருகே வந்தது. அப்போது அதிமுக கூட்டத்துக்குள் நுழைந்த மருத்துவ அவசர உதவி வாகனத்தை அதிமுகவினர் சிறைப்பிடித்தனர். அதிலிருந்த பணியாளா்களிடம் வாக்குவாதத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.
அவர்கள் வாகனத்துக்குள் நோயாளி இருக்கிறாரா எனச் சோதனையிட்டனர். நோயாளி இல்லாததைக் கண்டதும் ஆத்திரமடைந்து அதிமுகவினர் கூச்சலிட்டனர்.
அவசர உதவி வாகனப் பணியாளர்கள் நோயாளியை ஏற்றுவதற்காகச் செல்வதாகக் கூறியும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
தன்னுடைய பிரசாரக்கூட்டங்களில் அவசர உதவி வாகனத்தை அனுப்பி ஆளுங்கட்சியினர் இடையூறு ஏற்படுத்துவதாக எடப்பாடி பழனிசாமி அண்மையில் புகார் கூறியிருந்தாா்.
இதற்கு அரசுத் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அவசர உதவி வாகன ஊழியர்களைத் தாக்கினால் 3 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தமிழக அரசுத் தெரிவித்துள்ளது.

