சென்னை: நள்ளிரவில் தானியக்க வங்கி இயந்திரத்தை (ஏடிஎம்) உடைத்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர், ராகவன் தெரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் சேவை மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நள்ளிரவில் அம்மையத்தின் கண்ணாடிக் கதவுகளை உடைத்த மர்ம மனிதர்கள், அதனுள்ளே சென்று இயந்திரத்தின் கீழே பணம் வைக்கப்படும் பகுதியை உடைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அவ்வேளையில், அங்குப் பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை ஒலிக்கருவி அபாய ஒலி எழுப்பியது. அதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள், மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் தங்கள் முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
அபாய ஒலி கேட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஏடிஎம் மையத்திற்குமுன் திரண்டனர். அங்கே, பணம் செலுத்தும் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் வங்கிக்கும் காவல்துறைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைக் கைப்பற்றினர். மேலும், கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி மூலம் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

