அரியலூர்: சோழப் பேரரசின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் உருவாகவிருக்கும் அருங்காட்சியகத்தால் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை உலகிற்குத் தெரியவரும். தமிழர்களின் வரலாற்றை மறைக்கவும் அழிக்கவும் சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழர்களின் வரலாறு உலகிற்குப் பறைசாற்றப்பட வேண்டியது அவசியம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், ராஜேந்திர சோழனுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் மாபெரும் அருங்காட்சியகம் அமைப்பதற்குத் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 18ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், “ராஜேந்திர சோழனின் ஆளுமை மற்றும் அவரின் வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. அருங்காட்சியகம் திறந்தபின்னர் நமது தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை உலகம் அறிந்துகொள்ளும் என்று கூறினார்.
சிந்து சமவெளி நாகரிகமே இல்லை எனக்கூறி அதற்கு வேறு பெயர் சூட்ட துடிக்கிறார்கள். சோழர்களைக் காட்டிலும் மற்ற மன்னர்களின் வரலாற்றைப் பெரிதுபடுத்திக் காட்டுகின்றனர். எனவே, சோழ மன்னர்களின் பெருமைகள், அவர்களின் வரலாறுகள் ஆகியவை நிலைநிறுத்தப்பட வேண்டும். அதற்கு நாம் இவ்வகையான அருங்காட்சியகங்களை அமைப்பது மிக அவசியம் என்று அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்.