திருநெல்வேலி: அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் எவ்வாறு அமைதியைச் சீர்குலைக்கலாம் என்று பாஜகவும் அதன் ஆதரவுக் கட்சிகளும் யோசித்துக் கொண்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் நேற்றிரவு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “மதத்தின் பெயரால் உணர்வுகளைத் தூண்டுபவர்களை சந்தேகப்படுங்கள்; அவர்களிடம் கவனமாக இருங்கள் என்ற பைபிள் வாசகத்தைக் கூற விரும்புகிறேன்.” என்றார்.
“தமிழகத்தின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம்; ஒன்றாக நட்புடன் பழகும் மக்களை எப்படி எதிரிகளாகப் பிரிக்கலாம் என்று பலர் யோசிக்கின்றனர். ஆன்மிகத்தின் பெயரில் சில அமைப்புகளை அழைத்துச் செல்லும் வழி, வன்முறைக்கான பாதை என்பதை, தமிழகம் உணர்ந்துள்ளது.
“மத்திய பா.ஜ.க, அரசுக்கு, மதச்சார்பின்மை என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கிறது. தமிழகத்திலும், தனது திட்டத்தைச் செயல்படுத்த நினைக்கிறது. எப்படிப்பட்ட ஆபத்தையும் பா.ஜ.,வின் நாசக்கார திட்டத்தையும் எதிர்த்து, முறிடியக்கும் வலிமை தமிழகத்திற்கும் தி.மு.க.,வுக்கும் உண்டு.
“எஸ்.ஐ.ஆர் என்னும் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியைப் பொறுத்தவரை, இன்னும் நமது பணிகள் முடியவில்லை. வாக்குரிமை பறிக்கப்பட்டிருந்தால், அந்த வாக்காளர் பெயரை, பட்டியலில் சேர்ப்பதற்கான பணிகளை தி.மு.க., நிர்வாகிகள் செய்வர்.
“யாரும் கவலைப்பட வேண்டாம். நம்மை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு, பா.ஜ,க அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்யும். அதையெல்லாம் முறியடித்து, வெற்றி பெறுவோம்,” என்றார்.

