சென்னை: காவல்துறையினர் தனக்குத் தொந்தரவு கொடுப்பதாகக் கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் வந்திருந்தனர்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்துத் தலையில் ஊற்றித் தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்தார். இதைக் கண்டு அங்கு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி காவல் வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அந்தப் பெண், “வியாசர்பாடியில் உள்ள என் வீட்டிற்கு காவலர்கள் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்து வருகின்றனர். எனது கணவர் மீது ஏற்கெனவே கஞ்சா விற்றதாக வழக்கு உள்ளது. எங்கள் மீது மீண்டும் கஞ்சா வழக்குப் போட முயற்சி செய்கின்றனர். அவர்கள் இரவு பகல் பாராமல் திடீரென வந்து கதவைத் தட்டுகின்றனர்.
“இதுதொடர்பாக வியாசர்பாடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்விதப் பயனும் இல்லை.
“இப்போது எனது கணவர் எவ்விதக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற அவர் ஆட்டோ ஓட்டும் பணி செய்து வருகிறார். மகனும் மகளும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
“இந்நிலையில், காவல்துறையினர் அடிக்கடி வந்து என் வீட்டுக் கதவைத் தட்டுவதால் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அவர்களால் ஒழுங்காகப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

