சென்னை: காலி மதுபோத்தல்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ் ‘டாஸ்மாக்’ மதுக் கடைகளில் தானியங்கி இயந்திரங்களை நிறுவத் தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
வனப்பகுதிகளிலும் சுற்றுலாத் தலங்களிலும் காலி மதுபோத்தல்கள் வீசப்படுவதைத் தடுக்க இத்திட்டத்தைச் செயல்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, இத்திட்டத்திற்குத் தனியாகப் பணியாளர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ‘டாஸ்மாக்’ நிர்வாகம் தானியங்கி இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவுசெய்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் சோதனை முறையில் பயன்படுத்திப் பார்க்கப்படும் இயந்திரத்தில் போத்தலில் உள்ள கியூஆர் குறியீட்டை வருடி பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
முதற்கட்டமாக நகர்ப்பகுதிகள் மற்றும் அதிக வருவாய் கிடைக்கும் டாஸ்மாக் கடைகளில் இத்தானியங்கி இயந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இச்சேவையை விரிவுபடுத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஒப்பந்தப்புள்ளியைச் சமர்ப்பிக்கச் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி காலை 11 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 5ஆம் தேதியன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


