சென்னை: இந்து சமய அறநிலையத் துறையை மத்திய தணிக்கைத் துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
“ஆங்கிலேய அரசு காலத்தில் இந்து கோயில்களின் வரவு செலவுகளை மட்டுமே ஆய்வு செய்யும் அமைப்பாக இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வந்தது. சுதந்திரத்துக்கு பிறகு இந்து கோயில்களின் சொத்து, வருவாய், நிலங்கள், கட்டடங்கள் போன்ற அனைத்தையும் நிர்வகிக்கும் அமைப்பாக இந்து சமய அறநிலையத் துறை மாறிவிட்டது.
மாநில அரசின் இதர துறைகள் போல தனி அமைச்சகத்துடன் செயல்படும் இந்து சமய அறநிலையதுறையும் தணிக்கைக்கு உட்படுத்தபடவேண்டியது கட்டாயம்.
“அரசு நிதி ஒதுக்கப்படும் அனைத்து துறைகளும் தணிக்கை செய்யப்படவேண்டும் என்பது சட்டம். தமிழக முதல்வரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மேடைதோறும் இந்து சமய அறநிலையத் துறைக்கு ஏராளமான நிதி ஒதுக்கியதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால் தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும் என்றால் இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை சட்ட வரம்புக்கு வராது என்கிறார்கள்,” என்று சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
“இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி கோயில் நிர்வாகத்துக்கு அறங்காவலர் குழு அத்யாவசியமானது. ஆனால் 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுவே நியமிக்கப்படவில்லை.
“எனவே, காலியாக உள்ள அறங்காவலர் குழுக்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், அறநிலையத்துறையின் ஒட்டுமொத்த வரவு செலவு சொத்து கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தலைமை கணக்கு அமைப்பின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.