வாணியம்பாடி: குளிர்பதனப் பெட்டி அடிக்கடி பழுதடைந்ததால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அதனை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நிகழ்ந்தது.
சுபாஷ் என்ற அந்த ஆட்டோ ஓட்டுநர், ஓராண்டிற்குமுன் வாணியம்பாடியில் உள்ள ஒரு கடையில் அந்தக் குளிர்பதனப் பெட்டியை ஈராண்டு உத்தரவாதத்துடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்தக் குளிர்பதனப் பெட்டி அடிக்கடி பழுதானதாகச் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சேவை நிலையத்தைச் சேர்ந்தோர் நான்கு முறை அதனைச் சரிசெய்து தந்தனர்.
இந்நிலையில், மீண்டும் அந்தக் குளிர்பதனப் பெட்டி பழுதடைந்ததால் அதனைத் தனது ஆட்டோவில் ஏற்றி, அதனை வாங்கிய கடைக்கே கொண்டுசென்றார் சுபாஷ்.
“இந்தக் குளிர்பதனப் பெட்டி சரியில்லை. ஈராண்டுகள் உத்தரவாதம் கொடுத்துவிட்டு, ஓராண்டில் நான்கு முறை பழுதைச் சரிசெய்து கொடுத்துள்ளீர்கள். என் மனைவி கழுத்திலிருந்த தாலியை விற்று இந்தக் குளிர்பதனப் பெட்டியை வாங்கியுள்ளேன். இதனை எடுத்துக்கொண்டு, வேறு ஒன்றை மாற்றிக் கொடுங்கள்,” என்று சொல்லி, அவர் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், கடைக்காரர்கள் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதனால் சினமடைந்த சுபாஷ், அக்கடையின் முன்பே அந்தக் குளிர்பதனப் பெட்டியின்மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முயன்றார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள், அந்தக் குளிர்பதனப் பெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தி, சாலையில் கொண்டுசென்று வைத்தனர்.
பின்னர், “இந்தக் குளிர்பதனப் பெட்டியை இங்கேயே வைத்துச் செல்லுங்கள். இதில் என்ன பிரச்சினை என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறோம்,” என்று கூறி, அவர்கள் சுபாஷைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.


