மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி விலையுயர்ந்த காரை பரிசாக வென்றார் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி.
சிறந்த காளைக்கான முதல் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளைப் பெற்றுக் கொண்டார். அவருக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிராக்டரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடந்து முடிந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500 மாடு பிடி வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் முதலிடத்தையும், 15 காளைகளை அடக்கிய குன்னத்தூரைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் இரண்டாமிடத்தையும், 14 காளைகளை அடக்கிய திருப்புவனத்தைச் சேர்ந்த முரளிதரன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
முதல் பரிசு பெற்ற மாடுபிடி வீரர் கார்த்திக்கு, ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் காரும், கன்றுடன் கூடிய பசுவும் வழங்கப்பட்டன.
இரண்டாம் இடம் பிடித்த வீரருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
மூன்றாம் இடம்பிடித்த முரளிதரனுக்கு பரிசு வழங்கப்படவில்லை.
இறுதிச்சுற்றில் 30 வீரர்கள் பங்கு பெற்றனர். மஞ்சள், இளஞ்சிவப்பு, நீல நிறம் அணிந்த வீரர்கள் சுற்றுக்கு தலா 50 பேர் வீதம் களம் கண்டனர்.
பத்துச் சுற்றுகள் முடிந்த பின், அனைத்துச் சுற்றுகளிலும் முன்னிலை வகித்த 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த இறுதிச் சுற்றின்போது மதுரை அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மழையில் வழுக்கிக் கொண்டு ஓடும் காளைகளை அடக்கிய வீரர்களை பார்வையாளர்கள் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் உற்சாகப்படுத்தினர்.
37 காளைகள் தகுதி நீக்கம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில், பங்கேற்க 2,026 காளைகளும் 1,735 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். 925 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு, 888 காளைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, அவிழ்க்கப்பட்டன. போலி ஆவணம், காயங்களுடன் கொண்டு வரப்பட்ட 37 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இப்போட்டியில் மொத்தம் 500 வீரர்கள் பங்கேற்றனர்.