மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஆரவாரமாக நடைபெற்றது.
இம்முறை 3,000க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. 1,850 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க வீரத்துடன் போராடினர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை.
இப்போட்டிகளைக் காண மற்ற மாவட்ட, மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவர்.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி அவனியாபுரத்தில் பொங்கல் தினமான வியாழக்கிழமை (ஜனவரி 15) கோலாகலமாக நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டன. போட்டி நடக்கும் இடத்தில் இரண்டடுக்குப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன் பிறகு மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டதும் அவை துள்ளிக் குதித்துத் திமிறி ஓட, வீரர்கள் அவற்றின் திமிலைப் பிடித்து அடக்க முற்பட்டனர்.
முதல் பரிசை வென்ற காளைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பாக காரும், துணை முதல்வர் உதயநிதி சார்பாக டிராக்டர் வாகனமும் பரிசாக வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல் மாடுபிடி வீரருக்கும் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு தங்க காசுகள், இரு சக்கர வாகனங்கள், சைக்கிள், அண்டா, பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

