நெல்லை: நெல்லை மாவட்டத்தில் போதைப்பொருள்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் முதற்கட்டமாக, 120 ‘போதையில்லா கிராமங்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லையில் ‘போதையில்லா நெல்லை’ விழிப்புணர்வு ஓவிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் சிவராம் கலைக்கூடத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதையின் தீமைகளை விளக்கும் ஓவியங்களை வரைந்தனர். அந்த ஓவிய அட்டைகளை ஒருங்கிணைத்துப் பின்புறமாகத் திருப்பியபோது, மகாத்மா காந்தியின் பிரம்மாண்ட உருவம் உருவானது அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நெல்லை டிஐஜி திருநாவுக்கரசு, மாணவர்களின் படைப்புகளைப் பார்த்து பாராட்டினார்.
போதையில்லா நெல்லை திட்டத்தின்கீழ் அம்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல்நிலைய எல்லைக்கும் உட்பட்டு ஒரு கிராமம் வீதம், முதற்கட்டமாக 120 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டிஐஜி திருநாவுக்கரசு தெரிவித்தார்.
அக்கிராமங்களில் போதையில்லா நெல்லை திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கிராமங்களிலும் முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவர காவல்துறை திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறார்களுக்குப் போதை, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் சட்டப்படி மிகக் கடுமையான சிறைத் தண்டனை உறுதி செய்யப்படும் என்றும் போதையை முற்றிலுமாக ஒழிப்பதே காவல்துறையின் முதன்மை இலக்கு என்றும் டிஐஜி திருநாவுக்கரசு எச்சரித்தார்.
“போதைக்கு எதிரான போரில் பல கரங்கள் இணையவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காந்தியடிகளின் கொள்கை பின்னணியாகத் துணைநிற்கிறது. நெல்லை வட்டாரத்தில் ஏர்வாடி, தூத்துக்குடி பகுதிகளில் சட்டவிரோதப் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன,” என்றார் டிஐஜி திருநாவுக்கரசு.
