மதுக்கடைகளைக் குறைக்காமல் விழிப்புணர்வு விளம்பரமா?: உயர் நீதிமன்றம் கேள்வி

மதுக்கடைகளைக் குறைக்காமல் விழிப்புணர்வு விளம்பரமா?: உயர் நீதிமன்றம் கேள்வி

2 mins read
a3ad4bcf-4948-4782-805b-288ea3b4f28d
தேனி மாவட்டத்தின் பூதிப்புரம், ராஜபூபால சமுத்திரம் கண்மாய் அருகே மதுக்கடைகள் அமைக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

மதுரை: தமிழ் நாட்டில் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்காமல், ‘குடி குடியைக் கெடுக்கும்’ என விளம்பரம் செய்வதால் என்ன பயன் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞா் குமாரலிங்கம் சென்னை உயா் நீதின்ற மதுரை அமா்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா். அதில், பூதிப்புரம், ராஜபூபால சமுத்திரம் கண்மாய் அருகே மதுக் கடைகளை அமைக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தக் கடை அமையவுள்ள இடத்துக்கு அருகே பெண்கள் பொதுக் கழிவறை உள்ளது. இதனால், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.

மேலும், அரசின் கொள்கை முடிவுப்படி இந்த மதுக்கடை ஏற்கெனவே மூடப்பட்ட 500 கடைகளில் ஒன்றாகும். எனவே, இங்கு மதுக்கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, அந்த இடத்தில் மதுக்கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்பட்டதாக தமிழ் நாடு மாநில வாணிபக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டநீதிபதிகள், மதுக் கடை அமையவுள்ளதாக மனுதாரா் குறிப்பிடும் இடத்தின் அருகே பெண்கள் பொதுக் கழிவறை உள்ளது. அருகில், பேருந்து நிலையமும் உள்ளது. இந்தச் சூழலில் அங்கு மதுக் கடை அமைக்க அனுமதிக்க முடியாது. எனவே, அந்த இடத்தில் மதுக் கடை அமைக்கத் தடை விதிக்கப்படுதாக உத்தரவிட்டனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலும் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன. மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், ‘குடி, குடியைக் கெடுக்கும்’ என அரசு விளம்பரம் செய்வதால் என்ன பயன்? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மதுக்கடைஉயர் நீதிமன்றம்தமிழக அரசியல்