சென்னை: செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அல்ல’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியலை வெற்றி, தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும் கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் நம்முடைய அந்தத் தருணங்கள் மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.
“மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப் படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது,” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
எதைச் செய்தாலும் அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால்தான் ஒருவரது செயல்கள் மிக நேர்த்தியாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசியலுக்கும் அது பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார்.
தவெகவினர் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்கவேண்டும் என்றும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தாம் கேட்டுக்கொள்வதாக விஜய் தமது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழக கட்சிக் கொடியில், யானைச் சின்னம் அமைந்திருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கட்சிக் கொடியில் இருந்து ஐந்து நாள்களில் யானைச் சின்னத்தை நீக்காவிடில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் சந்தீப், தவெக தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த சில நாள்களில் தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில், அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள இப்புது நெருக்கடி, தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
யானைச் சின்னமானது, அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் என்றும் இந்தியாவில் வேறு யாரும் இதைப் பயன்படுத்தவில்லை என்றும் விஜய்க்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யானைச் சின்னத்தை தவெக கொடியில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இருப்பது குறித்தும் அதை நீக்கவேண்டும் என்றும் தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சந்தீப் கூறியுள்ளார்.
“ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடி அல்லது சின்னத்தைப் போன்று புதுக்கட்சிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது. நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபிறகும்கூட தவெக தங்கள் கட்சிக் கொடியில் மாற்றம் செய்யவில்லை.
“இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ராவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய ஒரு கடிதத்தின்படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்,” என்று திரு. சந்தீப் மேலும் கூறியுள்ளார்.

