புதுடெல்லி: துணைவேந்தர் நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவு குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்வது தொடர்பாக, சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.
எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக, வழக்கை விசாரித்த நீதிமன்றம், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.
இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் தமிழக அரசுக்குப் பின்னடைவு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

