சென்னை: உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து வடசென்னை தொகுதிகள் பக்கம் செல்ல தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்குக் காவலர்கள் தடை விதித்துள்ளனர்.
அதேபோல், அமைச்சர் சேகர்பாபுக்கும் திமுக தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடசென்னையில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த செல்வப்பெருந்தகைக்கு பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அங்குச் செல்ல காவலர்கள் தடைவிதித்துள்ளனர். அதுபோல, உளவுத்துறை எச்சரிக்கையின் அடிப்படையில், வடசென்னை பக்கமே வரவேண்டாம் என சேகர்பாபுக்கு திமுக தலைமை கட்டுப்பாடு விதித்துள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல்
அமைச்சர் சேகர்பாபுவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால், அவர் பலத்த பாதுகாப்புடன் பிரசாரம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார். மேலும், தனிப்படைக் காவலர்கள் அவரை ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர். திருவிக நகர் தொகுதிக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவேண்டும் எனவும் சேகர்பாபுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்து, படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி திருவிக நகரில் போட்டியிடுவதால், அங்கு நிலவும் உணர்வுபூர்வமான சூழலைத் தவிர்க்குமாறு அமைச்சருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் (கொளத்தூர்), நடிகர் விஜய் (பெரம்பூர்), ஜெயகுமார் (ராயபுரம்) என முக்கியப் புள்ளிகள் போட்டியிடுவதால் வடசென்னை தற்போது மிகுந்த பதற்றத்துடன் காணப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையை மையப்படுத்தி எதிர்க்கட்சியினர் பலரும் பிரசாரம் செய்வதால், திமுக கூட்டணி கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

