சென்னை: தமிழ்நாட்டில் பசுக்களையும் கன்றுகளையும் வதைப்பதற்கு முழுமையான தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அம்மாநில அரசு இந்திய உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இவ்வாண்டு மே 28ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட பக்ரீத் பண்டிகையன்றும் அல்லது வேறு எந்த நாளிலும் மாநிலம் முழுவதும் பசுவோ கன்றோ வதைக்கப்படக் கூடாது என்பதைத் தலைமைச் செயலாளரும் காவல்துறைத் தலைவரும் உறுதிசெய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மே 27 அன்று உத்தரவு பிறப்பித்தது.
பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், ஊரகப் பொருளியலை மேம்படுத்துவதற்கும் பசுவதைக்குத் தடைவிதித்த 1976ஆம் ஆண்டின் உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியிருந்தது.
இந்நிலையில், அந்த உத்தரவு 1958ஆம் ஆண்டின் ‘தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு’ முரணானது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளது.
தகுந்த அதிகாரி சான்றளித்தார் எனில், உழைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும் தகுதியற்ற, பத்து வயதுக்கு மேற்பட்ட பசுக்களை வதைக்க அச்சட்டம் அனுமதிக்கிறது.
இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சூர்ய பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் அந்த உத்தரவைப் பிறப்பித்தது.
குறிப்பிட்ட, ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விலங்குகள் வதைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கக் கோரியே அந்தப் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றமோ தமிழ்நாட்டில் எங்கும், எந்த நாளிலும் பசுக்களையும் கன்றுகளையும் வதைக்க முழுமையான தடை விதித்து உத்தரவிட்டது.

