சென்னை: திரைப்பட விமர்சனங்களைத் தடை செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சினிமா விமர்சனங்களை வெளியிடத் தடை கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அதில் படம் வெளியாகி முதல் மூன்று நாள்களுக்கு எந்தவித விமர்சனங்களையும் யூடியூப், இன்ஸ்டகிராம், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு இருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சவுந்தர், விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க இயலாது. அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என்று கூறினார். மேலும் மத்திய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
திரைப்படங்கள் வெளியான மூன்று நாள்களுக்கு விமர்சனங்கள் வெளியிடத் தடைவிதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததற்கு சமூக வலைத்தளங்களில் வரவேற்பு கிடைத்துள்ளது.

