புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க தடை

1 mins read
5e4f0702-9e63-4a15-87f3-92dec6ba2da6
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது சென்னையில் பட்டாசு வெடிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. - மாதிரிப்படம்

சென்னை: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது சென்னையில் பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகரக் காவல்துறை பாதுகாப்பைப் பலப்படுத்தி, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அவ்வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியக் கோவில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆளில்லா வானூர்தி படக்கருவிகள் மூலம் முக்கியமான இடங்களில் கண்காணிப்புப் பணிகளும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மெரினா கடற்கரை ஓரமாக குதிரைப்படைகள் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்படவுள்ளன. கடலில் இறங்கவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் 19,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் உரிய துறைகளிடம் முன்னனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொள்வோர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்