புதுடெல்லி: இன்று (ஏப்ரல் 9) முதல் வரும் 29ஆம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தவும் அவற்றின் முடிவுகளை வெளியிடவும் இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
சில மாநிலங்களில் மக்களவைக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல் மேற்கு வங்கத்தில் 29ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.
“இந்தக் காலக்கட்டத்தில் கருத்துக்கணிப்புகளை நடத்துவது, அவற்றை ஊடகங்களில் வெளியிடுவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இன் பிரிவு ‘126ஏ’-வின் படி விதிமீறலாகும்.
“இந்த விதியை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்,” என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

