மதுரை: திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழலுக்கிடையே, திருக்கார்த்திகை விழாவின் ஒன்பதாம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் பாலதீபம் ஏற்றப்பட்டு, உச்சிப்பிள்ளையார் கோயில் முன்பாகக் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்நிலையில், கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு தரப்பினரும் திரண்டு போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் எச்சரித்தனர். அதையடுத்து, மதுரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
திருக்கார்த்திகையை முன்னிட்டு தீப தரிசனம் காணவும் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் 7,000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,000 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள்; 4,000க்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கோயில், மலையடிவாரப் பாதைகள், தீபத்தூண், காசி விஸ்வநாதர் கோயில், தர்கா ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மலை உச்சியில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சட்டம், ஒழுங்கைக் கட்டிக்காக்கவும், பொதுமக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்தவும் திருப்பரங்குன்றம் மலை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது. அதன்படி மலை உச்சி, கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வாயில் மற்றும் 16 கால் மண்டபம் வரையிலான சாலை உள்ளிட்ட பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 23ஆம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25ஆம் தேதி காலை 10 மணி வரை மதுரை மாவட்ட எல்லைக்குள் பொதுக்கூட்டம், ஊர்வலம், போராட்டம் ஆகியவற்றுக்கும், பொதுமக்கள் மலையேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல என்றும், அது துளையுடன் கூடிய நில அளவைக்கல் என்றும் தமிழக அரசின் தொல்லியல் ஆய்வறிக்கை வெளியாகிப் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருக்கார்த்திகை நாளான நவம்பர் 24ஆம் தேதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், தீபம் ஏற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 144 தடை உத்தரவால் கார்த்திகை தீப நாளன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் பக்தர்கள் செல்ல முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும், 144 தடை உத்தரவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை பகல் 12.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை, விசாரணையின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
