சென்னை: முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் எனும் உணவுப் பொருளின் விற்பனைக்குத் தமிழக அரசு ஓராண்டுத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில அரசு வெளிட்டுள்ள செய்திக் குறிப்பில், துரித உணவு வகைகள், ஷவர்மா, வறுக்கப்பட்ட, தந்தூரி போன்ற அசைவ உணவுகளில் சேர்க்கப்படும் முக்கியப் பொருளாக மயோனைஸ் மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு, அதை உட்கொள்வோருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே உடனடியாக முட்டை அடிப்படையிலான மயோனைசின் பயன்பாடு, விற்பனை அல்லது விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என அது உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்தின் உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம், உரிமம் ரத்து செய்தல் அல்லது சட்டத்தின் கீழ் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் எடுக்கப்படுமெனவும் மயோனைஸ் சார்ந்த பொருள்களை வாங்கும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும் பொருள்களைச் சரிபார்க்கவும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.