21 வயதிற்குட்பட்டோர்க்கு மது விற்க தடை

21 வயதிற்குட்பட்டோர்க்கு மது விற்க தடை

மாதிரிப்படம்

14 May 2026 - 12:20 pm

1 mins read

சென்னை: தமிழ்நாட்டு அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளில் 21 வயதிற்குட்பட்டோர்க்கு மது விற்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்ததும் மாநிலம் முழுவதும் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிற்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும்படி முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்தார். அதனையடுத்து, அந்த 717 கடைகளும் மூடப்பட்டுவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 21 வயதுக்குட்பட்டோர்க்கு மது விற்பனை செய்யக்கூடாது எனத் தமிழ்நாடு மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகளிலும் மதுக்கூடங்களிலும் பணிபுரிவோர்க்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது

அந்த உத்தரவை மீறுவோர்மீது துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

சிறாரிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலும் அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரிகளில் பயில்வோரும் மது அருந்தும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இதனையடுத்து, சிறாரிடம் மதுப்பழக்கத்தைத் தடுக்கும் நோக்கில் அவர்களுக்கு மது விற்கக்கூடாது என டாஸ்மாக் மதுக்கடைகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மது வாங்குவோரின் வயது குறித்து ஐயம் எழுந்தால் அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களைச் சரிபார்த்து மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்