செந்தில் பாலாஜியைக் கைதுசெய்ய தடை, முன்பிணை

செந்தில் பாலாஜியைக் கைதுசெய்ய தடை, முன்பிணை

1 mins read
9dd3a8da-3f30-4b71-8d71-c08a77182031
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது. - கோப்புப் படம்: இடிவி பாரத்

சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் முன்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அவரைக் கைது செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை செந்தில் பாலாஜி எதிர்கொண்டு வருகிறார்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதிய வழக்கைப் பதிவு செய்தனர். 2021 முதல் 2025வரை முறைகேடு நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உட்பட எழுவர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

அவ்வழக்கில் செந்தில் பாலாஜியின் முன்பிணை மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதிகார முறைகேடு செய்ததற்கான முகாந்திரம் உள்ளதால் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல்துறையின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பழைய வழக்கு மீண்டும் கையில் எடுக்கப்படுகிறது என்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ரூ.100 கோடி ஊழல் நடந்துள்ளதால் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதிசெய்து, அவருக்கு முன்பிணை வழங்கினர்.

கைதுக்குத் தடை விதித்ததுடன், கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும், சாட்சிகளைக் கலைக்கக்கூடாது போன்ற நிபந்தனைகளையும் அவர்கள் விதித்தனர்.

குறிப்புச் சொற்கள்