வெளிமாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டுசெல்ல விதிக்கப்பட்ட தடை ரத்து

வெளிமாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டுசெல்ல விதிக்கப்பட்ட தடை ரத்து

கோப்புப் படம்: இஎன்எஸ்

17 Nov 2026 - 5:55 pm

2 mins read

சென்னை: தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குக் கனிமங்களைக் கொண்டுசெல்ல விதிக்கப்பட்ட தடையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்குத் தேவையான கருங்கல், ஜல்லிக்கற்கள் ஆகிய கட்டுமானப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

செயற்கை விலையேற்றத்தைத் தடுக்கவும் உள்ளூர் கட்டுமானப் பொருள்களின் விநியோகத்தை உறுதி செய்யவும் கடந்த ஜூலை மாதம் கனிம விதிகளில் தமிழக அரசாங்கம் திருத்தம் செய்தது.

இதன் அடிப்படையில், காரைக்கால், புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்குக் கருங்கல், ஜல்லிக்கற்களைக் கொண்டுசெல்ல மூன்று மாதங்களுக்குத் தடை விதித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரியும் புதிய விதிகளைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும் மனுதாரர்களில் ஒருவரான மது பிரேமநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர்.

தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்குகளை விசாரித்தது.

“திருத்தப்பட்ட விதிகளுக்கு அதிபரின் ஒப்புதலைப் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் மனுதாரர்களுக்கே சொந்தமானவை. அவற்றை எங்கு விற்க வேண்டும் என முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதால், மூன்று மாதத் தடைக்குத் தடை விதிக்க வேண்டும்,” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வாதங்களை ஏற்ற நீதிபதிகள், கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவை எனத் தீர்ப்பளித்தனர்.

மேலும், இவ்விதிகளின் அடிப்படையில் கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டுசெல்லத் தடை விதிக்க முடியாது எனக் கூறி, தமிழக அரசின் தடை உத்தரவை ரத்துசெய்தனர்.

குறிப்புச் சொற்கள்
மாநிலம்கனிமவளம்தடைஉயர் நீதிமன்றம்தமிழகம்