வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு: ரூ.50,000 அபராதம்

2 mins read
5d54a5dd-caa5-4e75-bd16-b103cbdfc0c4
வந்தே பாரத் ரயிலில் கொடுக்கப்பட்ட உணவில் வண்டு காணப்பட்டதாகப் பயணி தெரிவித்தார். - காணொளிப் படம்: தினமலர் / இணையம்

சென்னை: திருநெல்வேலியிலிருந்து சென்னை சென்ற வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்ததாகப் பயணி ஒருவர் புகார் அளித்தார்.

உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

திருநெல்வேலி, சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் வாரத்துக்கு ஆறு நாள்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு வழக்கம்போல் காலை உணவு வழங்கப்பட்டது.

அந்த உணவுடன் வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டுகள் செத்துக் கிடந்ததைக் கண்டு பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பயணி ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்தார்.

ஆனால், அது வண்டு அல்ல, சாம்பாரில் உள்ள சீரகம் என்று ரயில்வே ஊழியர் பதிலளித்தார்.

இதையடுத்து, பயணிகள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாம்பாரில் இறந்த வண்டுகள் மிதந்ததைப் பயணிகள் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அந்தக் காணொளியில் ரயிலில் பயணம் செய்த பயணி, “என் பெயர் முருகன், நான் நாங்குநேரியிலிருந்து வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்கிறேன்.

“காலை உணவுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் மூன்று வண்டுகள் இருந்தன. அதுபற்றி சக பயணிகளிடம் தெரிவித்தேன். தொடர்ந்து, இதுகுறித்து நான் ரயில்வே ஊழியரிடம் கூறுகையில், ‘அது வண்டு இல்லை, சீரகம்’ என்றார். இதனையடுத்து, நாங்கள் அது வண்டு என்பதை உறுதிசெய்ததையடுத்து அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

“வந்தே பாரத் ரயிலில் உணவுக்காக மட்டும் 200 ரூபாய் வசூல் செய்கின்றனர். மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இத்தகைய ரயிலில் வழங்கப்படும் உணவு, தரமானதாக இல்லை. எனவே, தரமான உணவை வழங்கவேண்டும். இதுகுறித்து மத்திய அரசாங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,” எனக் கூறினார்.

வண்டு இருப்பதாகக் கூறி, பயணி வெளியிட்ட காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து உணவு விநியோகம் செய்த நிறுவனத்துக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்