சென்னை: “உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் குணமடைந்து மீண்டும் வருவார். வரும் டிசம்பர் 9ஆம் தேதி சட்டமன்றம் கூடவுள்ளது. சட்டமன்றத்தில் அவருடைய குரலைக் கேட்பதற்குத் தமிழக மக்களும், நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், வியாழக்கிழமை (நவம்பர் 28) தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கெனவே பேஸ் மேக்கர் வைத்துள்ளனர். மூச்சு விடுவதில் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் அவருக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
உடல்நிலை நன்றாக இருந்துவந்த நிலையில், புதன்கிழமை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் நல்ல முறையில் மீண்டும் திரும்பி வருவார்,” என்று திரு செல்வப்பெருந்தகை கூறினார்.
முன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.