சென்னை: இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து தமிழ்நாட்டில் 5,000 ஊராட்சிகளில் ‘பாரத்நெட்’ இணைய வசதி தொடங்கப்பட இருக்கிறது.
உள்ளூர் ‘கேபிள் டிவி’ நடத்துநர்கள் மூலமாக மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த இணைய வசதி வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கு பாரத்நெட் இணைய வசதியை 2022 ஜூன் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், இதுவரை 4,100 ஊராட்சிகளுக்கு பாரத்நெட் இணைய வசதிக்கான இணைப்பு வழங்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது.
இதனால், வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 5,000 ஊராட்சிகளுக்கு பாரத்நெட் இணைய வசதிக்கான இணைப்பு வழங்கப்பட்டு, செப்டம்பர் மாதம் முதல் இணைய வசதியைத் தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 7,525 ஊராட்சிகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் பாரத்நெட் இணைய வசதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், நகர்ப்புறம், கிராமங்களுக்கு இடையிலான தகவல் தொழில்நுட்பத்திறன் இடைவெளியைக் குறைக்க தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் ரூ.1,627.83 கோடி செலவில் இத்திட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.