போகிப் பண்டிகை: புகைமூட்டம், அடர்பனியால் விமானச்சேவை பாதிப்பு

1 mins read
608da574-35c6-4f4d-aea0-8e05535d3903
வாகனவோட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனர். - படம்: விகடன்
multi-img1 of 4

சென்னை: போகிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கடும் புகைமூட்டத்துடன் கூடிய பனி நிலவியதால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

போகி தினத்தன்று 14 விமானங்களின் வருகை, புறப்பாடு ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது.

பொங்கல் தினத்தன்று காலை வரை நீடித்த பனிமூட்டத்தால் மொத்தம் 10 விமானங்களின் புறப்பாடும் 20 விமானங்களின் வருகையும் தாமதமானது. ஆக மொத்தம் சென்னையில் பனிமூட்டம் காரணமாக மொத்தம் 44 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம்.

போகிப் பண்டிகையையொட்டி பழைய பொருள்கள் எரிக்கப்பட்டன. குறிப்பாக வாகனங்களின் டயர்கள், நெகிழிப் பொருள்கள் ஆகியவை அதிக அளவில் எரிக்கப்பட்டதால் பல இடங்களில் புகைமூட்டம் எற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாக அளவுக்கு புகை மூட்டம் நிலவியது.

வாகனவோட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனர். சென்னையில் ராயபுரம், வடபழனி, வேளச்சேரி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்ததுடன் அங்கெல்லாம் காற்றுத் தரக்குறியீடு அபாய அளவை எட்டியது.

சென்னையில் பல பகுதிகளில் காற்றுத்தரம் மோசமாக உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. ஆக அதிகமாக கொடுங்கையூரில் காற்றின் தரக்குறியீடு 196ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்