புதுடெல்லி: மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாகக் கைவிடக் கோரி மேலூர் சுற்றுவட்டார பகுதியினர் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மேற்கொண்ட போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, வள்ளாலபட்டி, மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஏறக்குறைய 5,000 ஆயிரம் ஏக்கர் பகுதியில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம், டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதையடுத்து தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரிட்டாபட்டி பகுதி கிராமத்தினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஏல உரிமை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அரசியல் தலைவர்களும் மக்களும் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
மக்களின் உணர்வுக்கும் மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக்கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அதிமுகவும் துணைபோகக் கூடாது என்றார் அவர்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மதுரை அரிட்டாபட்டி மக்கள் நிம்மதியாக உறங்குவார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

