சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதியில் பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து முதிய தம்பதியைக் கொலை செய்த வழக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ், 32, என்பவரைச் சூரமங்கலம் காவலர்கள் கைது செய்தனர்.
பாஸ்கரன் (70), வித்யா (65) ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை ஒரு வாரமாக நோட்டமிட்ட சந்தோஷ், சுத்தியலால் அடித்து இருவரையும் கொலை செய்துள்ளான்.
முதிய தம்பதியர் இருவரும் அணிந்திருந்த 10 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சந்தோஷை சிசிடிவி காட்சிகளை வைத்துக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.
தம்பதியர் தங்களது வீட்டின் முன் மளிகைக் கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த மகன் ராமநாதன் தன் மனைவி, குழந்தைகளுடன் தர்மன் நகரில் தனியாக வசித்து வருகிறார்.
பால் வியாபாரம் செய்யும் இளைய மகன் வாசுதேவன் தன் மனைவி, பெற்றோருடன் வசித்து வருகிறார்.
பாஸ்கரன் தனது 70வது பிறந்தநாளை இரண்டு தினங்களுக்கு முன் கொண்டாடிய நிலையில், தனது குடும்பத்தினருடன் திங்கட்கிழமை (மே 12) பழனி கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், பால் வியாபாரம் செய்யும் வாசுதேவன் மாலை நேரத்தில் வீடு திரும்பியபோது, வீட்டிற்குள் தாய் வித்யா கொலை செய்யப்பட்டும், தந்தை பாஸ்கரன் படுகாயங்களுடனும் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாஸ்கரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.
கைது செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த சந்தோஷ் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம்குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.