சென்னை: பீகார் மாநில ஆடவர், தனது மனைவி, குழந்தைகளுடன் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னை மாநகரை உலுக்கியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌரவ் குமார், 24. இவருடைய மனைவி புனிதா குமாரி. இத்தம்பதியர்க்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருந்தது.
அண்மையில் பீகாரில் இருந்து வந்த கௌரவ் குமார், சென்னை தரமணியில் உள்ள ‘பாலிடெக்னிக்’ கல்லூரியில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார்.
தன் மனைவி, குழந்தையுடன் கல்லூரி வளாகத்திலேயே அவர் தங்கி, வேலை பார்த்து வந்த நிலையில், அவர் குடும்பத்துடன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடையார் பகுதியில் கடந்த 26ஆம் தேதி சாலையில் கிடந்த ஒரு மூட்டையில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பீதியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அந்தப் பையை பிரித்துப் பார்த்தபோது அதில் கௌரவ் குமாரின் சடலம் காணப்பட்டது. அவரது தலை, முகத்தில் வெட்டுக் காயங்களும் இருந்தன.
இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்து கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரு இளையர்கள் ஒரு மூட்டையை மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்து வீசி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
கொலையுண்ட கௌரவ் குமார், தனது கால்சட்டையில் வைத்திருந்த கைப்பேசியைக் கண்டெடுத்த காவல்துறையினர், அதில் இருந்த ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அது தனியார் பாதுகாவலர்களைப் பணியமர்த்தும் நிறுவனத்தின் எண் என்பது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
அங்கு நேரில் சென்று விசாரித்தபோது, கௌரவ் குமார் முதலில் அந்த நிறுவனத்தில்தான் வேலை கேட்டுச் சென்றதாகவும் அச்சமயம் வேலை ஏதும் இல்லை என்று கூறி அவரை அனுப்பி வைத்ததாகவும் அந்நிறுவனத்தார் தெரிவித்தனர். அதன் பிறகே தரமணி கல்லூரியில் அவர் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், கௌரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உட்பட ஏழு பேரைக் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
கௌரவ் குமாரைக் கொன்ற ஆறு பேரும் அவரது மனைவி புனிதாவைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவரையும் கொன்ற அக்கும்பல், அவரது இரண்டு வயது பச்சிளம் குழந்தையையும் ஈவு இரக்கமின்றி தரையில் தூக்கியடித்துக் கொடூரமாக கொன்றனர்.
கைதான ஏழு பேரும் அளித்துள்ள வாக்குமூலத்தில் புனிதாவை வன்கொடுமைக்கு உட்படுத்தியபோது கௌரவ் குமார் தடுக்க முயன்றதாகவும் அதனால் கோபமடைந்து கூர்மையான ஆயுதங்களால் அவரை வெட்டிக் கொன்றதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, கௌரவ் குமாரின் சடலத்தை அடையாறு முகத்துவார பகுதியிலும் அவரது மனைவி, குழந்தையின் சடலங்களை வேறு இடங்களில் வீசியதாகவும் கொலையாளிகள் கூறினர்.
இந்தக் கொலை தொடர்பாக ஏற்கெனவே ஏழு பேர் கைதான நிலையில், மேலும் இருவருக்குக் காவல்துறை வலைவீசியுள்ளது.

