கோயம்புத்தூர்: கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை அடுத்து, தமிழக-கேரள எல்லையில் வாளையாறு உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் கால்நடைப் பராமரிப்புத் துறை 24 மணிநேரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் 12 சோதனைச்சாவடிகளில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சிறப்புக் குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்துக் கோவை மண்டல கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சித்ரா தேவி கூறுகையில், “கேரளத்திலிருந்து வரும் சரக்கு வாகனங்களும் தமிழகத்திலிருந்து கால்நடைத் தீவனம் கொண்டுசெல்லும் வாகனங்களும் முழுமையாகச் சோதனை செய்யப்படுகின்றன. கிருமிநாசினி தெளித்த பிறகே அவை எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன,” என்றார்.
மேலும், வாகனங்களின் வருகை, புறப்படும் இடம், செல்லும் இடம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும், கோழிப் பண்ணைகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள சில கறிக்கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கு ஓமான் நாடு முழுமையாகத் தடைவிதித்துள்ளது.
பறவைக்காய்ச்சல் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், கடலூரில் நோய்ப் பரவலைத் தடுக்க பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்த கோழிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எடத்துவா, செறுதனா வட்டாரங்களில் உள்ள வாத்துகள் மற்றும் கோழிப் பண்ணைகளில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
