சென்னை: தமிழகத்தில் தேர்தல் வந்துவிட்டால் போதும், ஊரெங்கும் சுவரொட்டியின் வாசம் வீசுவதைவிட பிரியாணியின் வாசம்தான் அதிகமாக வீசும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொண்டர்களைக் கவனிப்பதில் தனிப் பாணி கடைப்பிடிக்கப்படுகிறது. காலையில் கொடி பிடிக்க வருபவர் முதல், மாலை பொதுக்கூட்டத்தில் கை தட்டுபவர்வரை அனைவரையும் கட்டிப்போடுவது மதிய உணவாக வழங்கப்படும் அந்த பொட்டலச் சோறுதான்.
புளியோதரை, எலுமிச்சை சாதம் என்று இருந்த உணவு, தற்போது ‘பிரியாணி’ ஆக உயர்ந்துள்ளது.
அதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது. ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்ய வேண்டும் என்றால், அதற்குப் பல வகையான காய்கறிகள், கூட்டு, பொரியல் என தனித்தனியாகச் செய்வது கடினம்.
ஆனால், பிரியாணி அப்படியன்று. ஒரே பாத்திரத்தில் இறைச்சியும் அரிசியும் சேர்த்து சமைத்துவிட்டால் அதை அப்படியே பொட்டலம் கட்டிவிடலாம்.
வரும் 2026 தேர்தலிலும் பிரியாணி விற்பனை என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது.
ஒரு வேட்பாளர் தனது தொகுதியில் ஒரு நாளைக்கு ஐந்து இடங்களில் பிரசாரம் செய்கிறார் என்றால், அவருடன் வரும் கிட்டத்தட்ட 500 முதல் 1,000 தொண்டர்களுக்குக் குறைந்தது இருவேளை உணவு வழங்கப்பட வேண்டும்.
இதைக் கணக்கிட்டு பார்த்தால், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோருக்கு உணவுத் தயார் செய்யவேண்டும். இதனால், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி ஆகியவற்றின் தேவை பல மடங்கு அதிகரிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, பல்லடம் போன்ற பகுதிகளில் இருந்து கோழிகளும், வெளியூர்களிலிருந்து ஆடுகளும் லாரிகளில் அணிவகுக்கும். இது பண்ணையாளர்கள் முதல் உள்ளூர் கறிக் கடைக்காரர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் காலமாக அமையும்.
இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு போன்ற மசாலாப் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் முதல், பாஸ்மதி அரிசி, பிரியாணியைப் பொட்டலம் கட்டப் பயன்படும் வாழை இலை வரை அனைவருக்கும் இது வருமானம் ஈட்டும் காலம்.
எது எப்படியோ, இந்தத் தேர்தல் களம் அரசியல் சூட்டைவிட பிரியாணி அண்டாவின் சூட்டில் அனல் பறக்கப் போவது உறுதி.


