புதுடெல்லி: சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நடந்த இந்திய ஆகாயப்படையின் விமான சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழந்த சம்பவம், அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தை “அரசாங்க ஆதரவால் நடந்த கொலை” என்று சாடியுள்ள பாஜக, இதற்கு திமுக அரசாங்கமும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கண்டித்துள்ளது.
“விமான சாகச நிகழ்ச்சியில் ஐவர் இறந்திருப்பதும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதும் துயரச் சம்பவமன்று. அது அரசாங்க ஆதரவால் நடந்த கொலை, பேரிடர்,” என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா விமர்சித்துள்ளார்.
உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று திரு ஸ்டாலின் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஊடகத் தகவல்களின்படி, உடலில் நீர்ச்சத்து குறைந்ததாலும் வெப்பத் தாக்கத்தாலும் மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், அதிகப்படியான கூட்ட நெரிசலும் போதிய வசதிகள் இல்லாததும் இதற்குக் காரணம் என நிகழ்ச்சிக்குச் சென்றவர்களில் சிலர் கூறினர்.
இந்நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த திமுக, பல கோவில் திருவிழாக்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்ததைச் சுட்டிக்காட்டியது.
“மெரினா கடற்கரையில் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். இத்தகைய எதிர்பாராத கூட்டத்தை மெரினா கடற்கரையால் கையாள முடியவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் எத்தனையோ கோவில் திருவிழாக்களிலும் நடந்துள்ளன,” என்று திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழக அரசாங்கத்தின் செயல்பாட்டைத் தற்காத்துப் பேசிய அவர், “எதிர்க்கட்சியினர் எங்களை எப்போதும் குறைகூறிக்கொண்டே இருப்பர். அவர்கள் எதையும் கையாள மாட்டார்கள்,” என்றார் அவர்.

