தமிழகத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டதுபோல பாஜக-அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் அப்படி ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடுவோரைக் காட்டிலும் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு 2001ல் திமுக ஒதுக்கிய 21 தொகுதிகளே அதிகம் என்று இருந்த நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவுடன் 2021ல் கூட்டு சேர்ந்த பாஜகவுக்கு 20 தொகுதிகள் தரப்பட்டன.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்ததைக் காட்டி இம்முறை அதிகத் தொகுதிகளைக் கேட்டு வந்தது. ஒரு கட்டத்தில் 60 தொகுதிகள் வேண்டும் என்று அடம்பிடித்த நேரத்தில் டெல்லியில் பஞ்சாயத்து செய்யப்பட்டது.
மார்ச் 19ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசிய பிறகு உடன்பாடு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து 27 தொகுதிகளை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியது. இம்முறை திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதைவிட பாஜகவுக்கு ஒரு தொகுதி குறைவுதான் என்று இருந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் எண்ணிக்கையை மறைமுகமாக உயர்த்தும் வகையில் கூட்டணிக் கட்சிகளை ஆறு பேர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
முதுபெரும் காங்கிரஸ் தலைவர் ஜிகே மூப்பனார் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்து வருகிறது. ஆனால், அரசியல் கட்சியின் அங்கீகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கு வாக்குகளைப் பெறாததால் சைக்கிள் சின்னத்தை அந்தக் கட்சி இழந்தது. 2021 தேர்தலில்கூட அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்திலேயே 6 தொகுதிகளில் போட்டியிட்டது தமாகா.
தொடர்புடைய செய்திகள்
இம்முறை ஐந்து தொகுதிகள் அக்கட்சிக்கு. ஆனால், அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சிகளும் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆக, தற்போதைய நிலவரப்படி 34 தொகுதிகளில் தாமரைச் சின்னம் போட்டியிடுகிறது.
இரண்டு தொகுதிகளைப் பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி, இரட்டை இலையா, தாமரையா என இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை.
ஒருவேளை அக்கட்சியும் தாமரைச் சின்னத்தை விரும்பினால் அந்தச் சின்னம் களம் காணும் தொகுதிகளின் எண்ணிக்கை 36ஆக அதிகரிக்கும்.
பொதுவாக, உதிரிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கப்படும்போது அவை கூட்டணிக்கும் தலைமை ஏற்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதே வழக்கமாக இருந்து வரும் நிலையில், இரண்டாம் நிலையிலிருக்கும் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது புதிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
ஆக, இந்தத் தேர்தலில் ஆக அதிகமான தொகுதிகளில் தாமரைச் சின்னம் களம் காண்கிறது. இது, தமிழக அரசியல் வரலாற்றில் புதிது என்பதோடு அரசியல் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. -திருநா

