முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால், கறுப்பு துப்பட்டா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகக் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் திங்கட்கிழமை காலை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கல்லூரி மாணவ-மாணவிகள் பலரும் வருகை தந்திருந்தனர். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவிகளில் சிலர் கறுப்பு நிற துப்பட்டா அணிந்திருந்ததுடன் கறுப்பு நிறக் கைப்பையும் வைத்திருந்தனர்.
அதனைக் கண்ட காவலர்கள் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் கறுப்பு துப்பட்டா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகரக் காவல்துறை சார்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “எழும்பூர் பகுதியில் ஜனவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற அரசு விழா நிகழ்வின் போது சென்னை பெருநகரக் காவல், பாதுகாப்பு சென்னை காவல் பிரிவினர் விழா நடக்கும் உள் அரங்கிற்குள், அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய்து அனுப்பும்போது, கறுப்பு துப்பட்டா அணிந்து வந்தவரிடம் இருந்து கறுப்பு துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.
“இந்நடவடிக்கை அங்கு பணியிலிருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் நிகழ்ந்தது எனத் தெரிய வருகிறது.
இனி அவ்வாறு நிகழாவண்ணம் இருப்பதற்கு சென்னை காவல் பிரிவிற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.