நெல்லை: குடிநீர்ப் பற்றாக்குறையை வலியுறுத்தி, கூடங்குளத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையின் வள்ளியூர் வட்டாரப் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வுகாண ரூ.605 கோடி மதிப்பிலான குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் கூடங்குளம் கிராமத்தை இணைக்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்தது.
எனினும், திடீரென கூடங்குளம் ஊராட்சி இணைப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் பலன் இல்லை.
எனவே, புதிய குடிநீர்த் திட்டத்தில் கூடங்குளம் கிராமத்தையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்கிராம மக்கள் கூட்டம்போட்டு, ஒரு தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்நிலையில், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் கறுப்புக் கொடி கட்டி வியாழக்கிழமை (பிப்ரவரி 12) போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்குள்ள முக்கியமான சாலைகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டப்பட்டது.
தங்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை என கூடங்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர்.


