சென்னை: கைதிகளைக் கண்காணிக்கத் தமிழக ஆயுதப் படைக் காவலர்கள் சீருடையில் படக்கருவி பொருத்தும் திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுதப் படையில் தற்போது 14,277 பேர் உள்ளனர்.
ஆயுதப் படையினருக்கான பணிகளில் முக்கியமானதாகவும், சவால் மிக்கதாகவும் கருதப்படுவது கைதிகளை நீதிமன்றத்துக்கு வழிக்காவலாக அழைத்துச் செல்வதாகும்.
நீதிமன்ற விசாரணைக்குச் சிறையிலிருந்து அழைத்துச் செல்லப்படும் கைதிகள் தப்பியோடுவது, கைதிகள் தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
சில வேளைகளில் கைதிகளின் பாதுகாப்புக்குச் செல்லும் ஆயுதப் படைக் காவலர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
அதேவேளையில் காவலர்களும் சட்டத்தையும், விதிமுறைகளையும் மீறிச் செயல்படுவதாகப் புகார் கூறப்படுகிறது.
இதன் விளைவாகக் கைதிகள் மட்டுமல்லாமல், கைதிகளை அழைத்துச் செல்லும் காவலர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் எனத் தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உணர்ந்தனர்.
அதன்படி, தற்போது கைதிகளுடன் பாதுகாப்புக்குச் செல்லும் ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் படக்கருவிகள் பொருத்தப்படுகின்றன.
இந்த படக்கருவிகள் கைதிகளைச் சிறையிலிருந்து காவல் துறை வேனில் ஏற்றும் வரையிலும், பின்னர், வேனிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வரையிலும் செயல்பாட்டில் வைக்கப்படுகின்றன.
படக்கருவி 73 மி.மீ. உயரத்துடன், 48 மி.மீ. அகலத்துடன் 115 கிலோ கிராம் எடை கொண்டதாகும்.
மேலும், பதிவாகும் காட்சியைப் படக்கருவியின் மறு பகுதியில் காணும் வகையில் 2.0 அங்குலத் திரை உள்ளது.
இந்த படக்கருவியின் மூலம் ‘120 டிகிரி’ கோணம் வரை காட்சிகளைப் பதிவு செய்ய முடியும். ‘40 எம்பி’ வகையைச் சோ்ந்த இந்த படக்கருவியில் பதிவாகும் காட்சிகள் மிகுந்த துல்லியத்துடனும், தரத்துடனும் இருக்கும்.
படக்கருவியில் பதிவாகும் காட்சிகளைச் சேமித்துவைக்கும் வகையில் ‘32 ஜிபி’யில் இருந்து ‘256 ஜிபி’ வரை அதற்குத் திறன் உள்ளது. படக்கருவியுடன் இணைந்துள்ள மின்கலம் 10 மணி நேரம் வரை தொடா்ச்சியாக மின்சாரத்தை வழங்கக் கூடியது.
