திருநெல்வேலி: ஜமைக்கா நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நெல்லை இளையர் விக்னேஷின் உடல் 78 நாள்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவருக்குரிய இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
31 வயதான விக்னேஷ் ஜமைக்காவில் உள்ள ஒரு பேரங்காடியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி அந்த அப்பேரங்காடியில் கொள்ளையர்கள் புகுந்தனர். அங்கிருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்லும்போது, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குண்டு பாய்ந்து உயிரிழந்தார் விக்னேஷ். இதனால் அவரது குடும்பத்தார் வேதனை அடைந்தனர்.
ஜமைக்காவில் உள்ள சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் பத்து நாள்களில் விக்னேஷ் உடல் சொந்த ஊருக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் அவரது உடலை மீட்டு வருவதில் சிக்கல் நிலவியது.
இதையடுத்து, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜமைக்கா அதிகாரிகளுடன் பேசி விக்னேஷின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதற்குப் பலன் கிடைத்தது.
ஜமைக்காவில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க், மும்பை, திருவனந்தபுரம் வழியாக அவரது உடல் கடந்த செவ்வாய்க்கிழமை நெல்லை வந்தடைந்தது.
விக்னேஷின் உயிரற்ற உடலைக் கண்டு அவரது தாய் பொன்னம்மாள், சகோதரி ருக்மணி, உறவினர்கள் என அனைவரும் கதறி அழுதனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சுட்டுக்கொல்லப்பட்ட விக்னேஷுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.