சென்னை: புகழ்பெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மோப்ப நாயின் துணையுடன் வெடிகுண்டு வல்லுநர்களும் காவல்துறையினரும் சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் எதுவும் சிக்காததை அடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
ஆயினும், இதன் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள காவல்துறை, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அண்மையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் தொடர்பில் ஞானசேகரன் என்ற 37 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தைத் தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், ஐபிஎஸ் அதிகாரிகள் மூவர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் நியமித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.